Filled Under:

நோன்பின் நோக்கமும், சிறப்பும் நோன்பின் நோக்கம்



நோன்பின் நோக்கமும், சிறப்பும்
நோன்பின் நோக்கம்
பசி எப்படிப்பட்டது என்பது உணரப்படுகிறது, உடலின் ஆரோக்கியம் பேணப்படுகிறது என்றெல்லாம் காரணங்கள் கூறினாலும் நோன்பினால் இந்தப் பயன்கள் இருக்கலாம். இந்தப் பயன்களைக் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நோன்பு நோற்க வேண்டுமா? நிச்சயமாக
இல்லை. நாம் பக்குவப்படுவதும், இறையச்சமுடையவராக ஆவதும்தான் நோன்பின் பிரதான நோக்கம். திருக்குர்ஆன் 2:183வது வசனம் இதனைத் தெளிவுப்படுத்துகிறது.
”பொய் சொல்வதையும், பொய்யான அடிப்படையில் செயல் படுவதையும் எவர் விடவில்லையோ அவர் தனது உணவையும் பானத்தையும் விட்டிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை,” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜா.
தவறான நடவடிக்கைகளிலிருந்து விடுபடாமல், பட்டினிக் கிடப்பதோ, தாகித்திருப்பதோ இறைவனுக்குத் தேவையில்லை. என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கலாம்.
நோன்பின் சிறப்பு!
நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து எவர் ரமளானில் நோன்பு வைக்கிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்: புகாரி முஸ்லிம் திர்மிதி.
ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழு நூறு மடங்குவரை கூலி கொடுக்கப்படுகின்றது. ”நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்” என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும் நோன்பாளியின் வாய் நாற்றம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்: திர்மிதி.
சுவர்க்கத்தில் ரய்யான் என்றொரு வாசல் உள்ளது, அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டுமே) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஸஹ்ல் பின் ஸாஃது (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.
”நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்: திர்மிதி

Copyright @ 2013 WWW.KALAWEWA.COM.