Filled Under:

ரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)





நீண்டகாலமாக உலகமெங்குள்ள முஸ்லிம்கள் ரமழான் அரவுகளில் தராவீஹ் என்ற பெயரால் 20 ரகஅத்துகள் தொழுது வருகிறார்கள். பரம்பரை பரம்பரையாக 20 ரகஅத்துகள் தொழுது வருவதால் அதை நியாயப்படுத்தவே மனிதமனம் விரும்புகிறது. ஆனால் மன விருப்பம் மார்க்க விருப்பம் ஆக முடியாது. அல்லாஹ்(ஜல்), நபி(ஸல்) அவர்களைக்கொண்டு, மார்க்கமாகக் காட்டித்தந்தது மட்டும் தான் மார்க்கமாக முடியும்.
மார்க்கம் நிறைவு பெறவில்லையா?
குர்ஆனிலும், ஹதீஸிலும் மார்க்கம் நிறைவாக இல்லை. அதை நிறைவு படுத்த மனித அறிவு அவசியம் என்று எண்ணுவதே ஈமானைப் பங்கப்படுத்தும் சிந்தனையாகும். குர்ஆனிலும், ஹதீஸிலும் மனிதனின்
நேரான வாழ்க்கைக்குத் தேவையானவை, நிறைவாகவும் தெளிவாகவும் இருக்கின்றன என்பதே அறிஞர்களின் ஏகோபித்த முடிவாக இருக்கிறது.
இந்த அடிப்படைச் சிந்தனைகளோடு, ரமழான் இரவுத் தொழுகை எத்தனை ரக்க அத்துகள் என்று ஆதாரபூர்வமான ஹதீஸ்களைக் கொண்டு ஆராய்வோம். நாம் இன்று பயன்படுத்திவரும் தராவீஹ் என்ற பதம் ஹதீஸ்களில் காணப்படவில்லை என்பதை முதலில் நாம் விளங்கி கொள்ள வேண்டும். இரவுத் தொழுகை, ரமழான் தொழுகை. தஹஜ்ஜத் வித்ர் என்ற பெயர்களாலேயே இந்தக் குறிப்பிட்ட தொழுகை பல ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் நபி(ஸல்) அவர்கள், உமர்(ரழி) அவர்கள், மற்றும் சிறப்புக்குரிய நபித் தோழர்கள் 8+3=11 ரகஅத்துகளுக்கு மேல் இந்த ரமழான் தொழுகை தொழுததில்லை என்றுதான் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தராவீஹ் என்று பெயர் மாற்றம் செய்தவர்களும், 20 ரகஅத்துகளாக ஆக்கியவர்களும் பின்னால் தோன்றியவர்களே அல்லாமல் அல்லாஹ்(ஜல்) தனது தூதரைக் கொண்டு கற்பித்தது அல்ல என்பதை விளங்கி கொள்வோமாக.
ரமழான் தொழுகை 8+3 ரகஅத்துகள்
அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடம் அபூசல்மதுப்னு அப்துர் ரஹ்மான்(ரழி), நபி(ஸல்) அவர்களின் ரமழான் தொழுகை எவ்வாறு இருந்தது என்று கேட்டதற்கு “ரமழானிலும், ரமழான் அல்லாத காலங்களிலும் நபி(ஸல்) 11 ரகஅத்துகளுக்கு மேல் தொழுததே இல்லை” என்று கூறிய ஹதீஸ் காணப்படும் நூல்கள் :
1. புகாரி பாகம்….1 பக்கம் 342 – 343
2. முஸ்லிம் பாகம்…..1 பக்கம் 254
3. அபூதாவூது பாகம்…..1 பக்கம் 196
4. திர்மிதி பாகம்…..1 பக்கம் 58
5. நஸாயீ பாகம்……3 பக்கம் 234
6. முஅத்தா இமாம் மாலிக் பாகம் …. பக்கம் 81
7. இப்னு ஹுஸைமா பாகம் …..2 பக்கம் 192
8. முஸ்னது அஹ்மத் பாகம் ……6 பக்கம் 36
9. முஸ்னது அபூஅவானா பாகம் …..2 பக்கம் 334
10. முஅத்தா இமாம் முஹம்மது பக்கம் 141
11. பைஹகீ பாகம்……2 பக்கம் 495
12. ஷரஹ்மஆனில் ஆதார்தஹாவீ பாகம் ….2 பக்கம் 282
13. ஷரஹ் சுன்னாஹ் பாகம் ….4 பக்கம் 3
14. தாரமீ பாகம் ….1 பக்கம் 344
மேற்கண்ட நூல்களில் காணப்படும் இந்த ஹதீஸ், தஹஜ்ஜத் குறித்தது. ரமலான் தொழுகை சம்பந்தப்பட்டதல்ல என்று இன்று சிலர் வாதிடுகின்றனர். பாவம் ஹதீஸைப் பற்றிய விளக்கம் இன்று இவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டியுள்ளது. ஹதீஸ்களைக் கோர்வை செய்த அறிஞர்கள் அனைவரும் அன்று அறியாமல் இந்த ஹதீஸை ரமழான் தொழுகை என்ற பாடத்தில் எழுதிவிட்டார்கள் போலும்! இந்த ஹதீஸ் ரமழான் தொழுகையைக் குறிக்கும் என்று புகாரிக்கு விரிவுரை எழுதிய பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக;
1. அல்லாமா அஹ்மதிப்னு முஹம்மது கதீபகஸ்தலானி(ரஹ்) புகாரி விரிவுரை பாகம் 2 பக்கம் 267
2. அல்லாமா ஹாபிழ் அஹ்மது அலீ ஹனபி சஹரன்பூரி(ரஹ்) புகாரி விரிவுரை பாகம் 1 பக்கம் 154
3. அல்லாமா ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) புகாரி விரிவுரை பாகம் 4 பக்கம் 254
4. அல்லாமா அனன்வர்ஷா கஷ்மீரி (ரஹ்) புகாரி விரிவுரை பாகம் 2 பக்கம் 420
5. முல்லா அலீகாரி (ரஹ்) மிர்காத் ஹாஷியா மிஷ்காத் பாகம் 1 பக்கம் 115
இன்னும் பல ஆதாரஹ்கள் இருக்கின்றன. விரிவஞ்சி விடுகிறோம்.
அல்லாமா முஹம்மது காஸிம் நானுத்தவி தேவ்பந்த் மதரஸாவின் ஸ்தாபகர் “அறிவுடையவர்களிடம் ரமழான் தொழுகை (தராவீஹ்) தஹஜ்ஜுத் இரண்டும் ஒன்றுதான்” என்று மனது பைஜுல் காசிமிய்யா பக்கம் 13ல் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆக இந்த ஹதீஸ் தஹஜ்ஜுத் சம்பந்நதப்பட்டது. ரமழான் தொழுகை சம்பந்தப்பட்டதல்ல என்று வாதிடுவோர் குறைமதி படைத்தவர்களே. இவர்கள் வாதம் சரி என்றால் நபி(ஸல்) ரமழானில் ரமழான் தொழுகை 23 ரகஅத்துகள், தஹஜ்ஜுத் 11 ரகஅத்துகள் ஆக 34 ரகஅத்துகள் தொழுதிருக்க வேண்டும். அதுவும் வித்று இரண்டுமுறை தொழுதிருக்க வேண்டும். இது அறிவுக்குப் பொருந்தாது? 34 ரகஅத்துகள் நபி(ஸல்) தொழுதிருந்தால் 11 ரகஅத்துகளுக்கு மேல் தொழுததே இல்லை என்று ஆயிஷா(ரழி) அறிவித்திருப்பார்களா? என்று ஆராய்ந்து பாருங்கள். நபி(ஸல்) அவர்கள் ரமழானின் தொழுகை 8+3=11 ரகஅத்துகள் மட்டுமே தொழுதார்கள் என்பதற்கு இரண்டு ஹதீஸ்கள் இருக்கின்றன. அவற்றையும் அறியத்தருகிறோம்.
1. ஜாபிர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் ரமழானில் 8ரகஅத்துகளும் வித்ரு 3ரகஅத்துகளும் தொழவைத்ததாக அறிவிக்கின்றார்கள். இந்த ஹதீஸ் இப்னு ஹுஸைமா இப்னு ஹுஸைமா பாகம் 2. பக்கம் 138-ல் காணப்படுகிறது.
2. உபைஇப்னுகஃப்(ரழி) ரமழானில் இரவில் பெண்களுக்கு 8 ரகஅத்துகளும் வித்ரு 3 ரகஅத்துகளும் தொழவைத்ததை நபி(ஸல்) அவர்கள் அதை மெளனமாக ஏற்றுக் கொண்டார்கள் என்ற அறிவிப்பு முஸ்னது அபூயஃலா பக்கம் 155 -ல் காணப்படுகின்றது. இந்த ஹதீஸை ரயீஸுத்தப்லீக் மெளலவி யூசுப்(ரஹ்) அவர்கள் தனது ஹயாத்துஸ்ஸஹாபா பாகம் 3 பக்கம் 167 -ல் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
தப்லீக் தஃலீம் தொகுப்புகளைத் தொகுத்த மெளலவி ஜகரிய்யா(ரஹ்) அவர்கள் அவ்ஜஸுல் மஸாவிக் என்ற இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் முஅத்தாவின் விரிவுரை பாகம் 1. பக்கம் 339 -ல் ரமழான் தொழுகை 20 ரகஅத்துகள் என்பதற்கு ஆதாரம் இல்லை. அறிஞர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற கருத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களின் ரமழான் சிறப்பு என்ற தஃலீம் நூலில் ரமழான் தொழுகை 20 ரகஅத்துகள் என்று எங்குமே குறிப்பிடப்படவில்லை என்பதை முஸ்லிம்கள் சிந்திக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
ரமழான் தொழுகை 20 ரகஅத்துகள் என்ற ஹதீஸ்களின் நிலை?
நபி(ஸல்) அவர்கள் ரமழானில் 20 ரகஅத்துகள் தொழுததாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களைக் கொண்டு அறிவிக்கப்பட்ட ஒரு இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ் சில கிதாபுகளில் காணப்படுகின்றது.
இந்த ஹதிஸின் அறிவிப்பாளர் வரிசையில் வருகின்ற:
1. அபூசைபா இப்ராஹிம் இப்னு உஸ்மான் 2. ஹகம் இப்னு உதைபா ஆகிய இருவரம் காஜிகளாக இருந்தார்கள். பொய்யர்கள் என்று அஸ்மாவுர்ரிஜால் (அறிவிப்பாளர்களின் தகுதிகளை எடைபோடும்) கலையில் வல்லுனர்கள் பலர் பதிவு செய்துள்ளனர்.
இமாம்களான ஸுஹ்பா, அஹமது, இப்னு முயீன், புகாதி, நஸயீ (ரஹ்-அலை) போன்றோர் இந்த இருவரையும் நல்லவர்களாக, நேர்மையாளர்களாகக் கணிக்கவில்லை. ஹதீஸ் கலை வல்லுனர்கள் அறிவிக்கப்பட்டுள்ள உண்மையான ஹதீஸுக்கு எதிராக இருக்கிறது என்று அறிவித்து நிராகரிக்கின்றார்கள். தேவ்பந்த் ஆலிம்கள் பலரின் நூல்களில் இந்த உண்மை தெளிவாக இருந்தும் அப்பாவி முஸ்லிம்களை சிலர் ஏன் தான் ஏமாற்றி, கஷ்டம் கொடுக்கிறார்களோ தெரியவில்லை?
இதே போல் உமர்(ரழி) 20 ரகஅத்துகள் தொழுதார்கள். தொழ வைக்கும்படி சொன்னார்கள். உமர்(ரழி) காலத்தில் 20 ரகஅத்துகள் தொழப்பட்டது போன்ற ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்ட பலஹீனமான ஹதீஸ்களாக காணப்படும் உமர்(ரழி) காலத்தில் மக்கள் 20 ரகஅத்துகள் தொழுதார்கள் என்ற ஹதீஸ் பலஹீனமானது காரணம் இதை ரிவாயத்துச் செய்யும் யஸீதுப்னுரூமான் உமர்(ரழி) காலத்தில் பிறக்கவே இல்லை என்று பைகஹீ இமாமே பைகஹீ பாகம் 2 பக்கம் 496 ல் குறிப்பிட்டுள்ளதை ஏன் மறைகின்றாகள்?
உமர்(ரழி) அவர்கள் ஒருவரிடம் ஜனங்களுக்கு 20 ரக அத்துகள் தொழவைக்கும்படி கட்டளையிட்டதாக, யஹ்யா இப்னு சயீத்(ரஹ்) அவர்களால் அறிவிக்கப்படும் ஹதீஸை ஆராயும்போது, இந்த யஹ்யா இப்னு சயீத் 5வது தலைமுறையைச் சேர்ந்தவர், உமர்(ரழி) இறப்பிற்கும் 100 வருடம் பின்னால் வாழ்ந்தவர் என்று ஹதீஸ் கலை வல்லுனாகள் பதிவு செய்துள்ளாாகள்.
உபை இப்னு கஃபு(ரழி) ஜனங்களுக்கு 20 ரகஅத்துகள் தொழ வைத்தார்கள் என்பதும் ஆதாரமற்றது. காரணம், உபை இப்னு கஃபு(ரழி) நபி(ஸல்) அவர்களது காலத்திலேயே பெண்களுக்கு 8+3 ரகஅத்துகள் தொழ வைத்து நபி(ஸல்) அவர்களின் அங்கீகாரம் பெற்ற ஹதீஸ் பலமானது. மேலும் உமர்(ரழி), உபை இப்னு கஃபு(ரழி) மதீமுத்தாரி(ரழி) ஆகிய இருவருக்கும், ஜனங்களுக்கு 8+3 ரகஅத்துகள் தொழ வைக்க ஏவிய சம்பவம், ஸாயிப் இப்னு யஸீதால் அறிவிக்கப்பட்டதை, இமாம் முஹம்மது இப்னு நஸிர்(ரஹ்) தனது கியாமுல்லைல் பக்கம் 91-லும் பதிவு செய்துள்ளார்கள், இது தஹாவீ பாகம் 1 பக்கம் 173 லும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷரஹ் மஆனில் ஆதார் பாகம் 2 பக்கம் 293 -லும் பதியப்பபட்டுள்ளது.
ஆக ரமலான் இரவுத் தொழுகை (தராவீஹ்) 8+3 என்பதற்கு நபி(ஸல்) அவர்கள் வரை போய்ச் சேரும் ஹதீஸ்கள் மூன்றும் ஆதார பூர்வமானவை. 20 ரகஅத்துகள் என்ற ஹதீஸ்கள் நபி(ஸல்) அவர்கள் வரைப் போய்ச் சேரவில்லை. அறிவிப்புகளும் மிகவும் பலஹீனமானவை என்று ஹதீஸ் கலை வல்லுனர்களாலேயே நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை வைத்துச் செயல்படுவதா? என்பதை அறிவுடையவர்கள் ஆராய்ந்து பார்க்கட்டும். மார்க்கத்தை அல்லாஹ்(ஜல்), நபி(ல்) அவர்களைக் கொண்டே நிறைவு செய்திருக்கிறான் என்பதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
குர்ஆன் – ஹதீஸுக்கு முரண்பட்ட வணக்க வழிபாடுகள் குருட்டு நம்பிக்கைகள், சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தையும் குழி தோண்டி புதைத்து விட்டு, குர்ஆன் – ஹதீஸைக் கொண்டு நிலைநாட்டப்பட்ட உண்மையான இஸ்லாம் மார்க்கத்தை மட்டும் பி

ன்பற்றி, அல்லாஹ்(ஜல்)வின் அருள் பெற முன் வாருங்கள்.
“எங்கள் ரப்பே! உள்ளதை உள்ளபடி விளங்கி
உண்மை இஸ்லாம் மார்க்கத்தைக் கடைபிடிக்கும்
உண்மை முஸ்லிமாக நாங்கள் வாழ
அருள் புரிவாயாக!” ஆமீன்.

Copyright @ 2013 WWW.KALAWEWA.COM.